விவசாயிகளுக்கு கை கொடுக்கும் விளக்குப்பொறி

விளக்குப் பொறியை பற்றிய விரிவான தகவல்கள்:
விளக்குப் பொறி என்றால் என்ன???
 
விவசாயத்தில் நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு பல்வேறு கட்டுப்படுத்தும் முறைகளை மேற்கொண்டு தீங்கு விளைவிக்க கூடிய பூச்சிகளை எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய முறையாகும். 
ஒளியில் உள்ள குறிப்பிட்ட வகை புற ஊதா கதிர்களை கொண்டு குறிப்பிட்ட வகை பூச்சிகளை நாம் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இயலும். இந்த விளக்குப் பொறியானது சூரிய ஒளி, பேட்டரி மற்றும் மின் இணைப்பு மூலமாகவும் செயல்படுகிறது.
 
விளக்குப் பொறியை பயன்படுத்த வேண்டியதின் அவசியம்...
1.தொடர்ச்சியான மற்றும் வரையறை அற்ற பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களின் பயன்பாட்டினால் நாளுக்கு நாள் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதிகரிப்பதுடன் எளிதில் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு தன்மை பெறுகிறது.
 
2.உணவு மற்றும் காய்களில் பூச்சி மருந்துகள், களைக் கொல்லிகள் மற்றும் உரங்களின் எச்சங்களால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள்.
 
3.இவ்வாறான வரையறை அற்ற பூச்சி மருந்து மட்டும் உரங்களினால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு அதில் காணப்படும் நன்மை செய்யும் உயிரினங்களை நாளுக்கு நாள் அழித்து வருகிறோம்.
 
4.இது மட்டுமன்றி இந்த தீங்கு விளைவிக்கக் கூடிய மருந்துகள் நீர் நிலைகளை சென்றடைந்து நீர் வாழ் உயிரினங்களை பாதிப்படைய  செய்வதுடன் நீரை அன்றாட பயன்பாட்டுக்கு பயன் படுத்தா வண்ணம் மாற்றுகிறது.
 
5.இந்த விளக்குப் பொறி நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதுடன் நன்மை செய்யும் பூச்சிகளை அழிக்காமல் தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் அழித்து விவசாயிகளுக்கு உதவி புரிகிறது.
 
6.விளக்குப் பொறியானது பயிர் பாதுகாப்பில் பூச்சிகளை கண்காணிக்க மற்றும் கட்டுப்படுத்த மட்டும் அல்லாமல் உணவு மற்றும் தானியக் கிடங்குகள், சேமிப்பு கலன்கள் போன்றவற்றிலும் பூச்சிகளை கவர்ந்து அழிக்க பயன்படுகிறது.
 
7.இதுபோன்று எண்ணற்ற காரணங்களினால் விளக்குப் பொறியின் பயன்பாடு இன்றி அமையாத தாகும்.
 
இதை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
 
1.விளக்குப் பொறியை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது  பயிர்களில் எந்தெந்த பருவங்களில் எந்தெந்த நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் நம் நிலத்திற்கு வருகை புரிகிறது என்பதை சிறப்பாக கண்காணிக்கலாம்.
 
2.விளக்குப் பொறியை சரியாக பயன்படுத்தும் போது தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதற்கேற்றவாறு கட்டுப்படுத்தும் முறைகளை மேற்கொள்ளலாம்.
 
3. விளக்குப் பொறிகள் தீமை செய்யக்கூடிய ஆண் மற்றும் பெண் பூச்சிகளை கவர்ந்து அழிப்பதால் வேகமாக பூச்சி தாக்குதலை குறைக்கலாம். ஆனால் இனக்கவர்ச்சி பொறியில் நாம் தாய் அந்து பூச்சிகளை மட்டுமே கவர்ந்து அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
4.மேலும் இந்த விளக்குப் பொறி மூலம் பல்வேறு நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் விவரங்களை சேகரிக்க முடியும் மற்றும் இரவு நேரங்களில் மட்டும் பயிர்களை உண்ணக்கூடிய பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
 
5.விளக்குப் பொறியை பயன்படுத்தி பயிர்களை தாக்கக்கூடிய பட்டாம்பூச்சி வகையை சேர்ந்த அந்து பூச்சிகள், பழ ஈக்கள், பல்வேறு வண்டு வகைகள், பாதிப்பை ஏற்படுத்தும் குழவிகள் என பல தீமை செய்யும் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
 
6. சராசரியாக ஒரு இளம் தாய் பூச்சிகளை அழிப்பதால் அதிலிருந்து உருவாகக் கூடிய சுமார் 200 முதல் 500 புழுக்கள் மற்றும் அவைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.
 
7.விளக்குப் பொறியை பயன்படுத்தி 45% வரை பூச்சி தாக்குதலை தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். 
 
8.மேலும் இதன் மூலம் 50 சதவீத மகசூல் அதிகரிப்பை உணரலாம்.
 
9.இந்த முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவதால் உற்பத்தி செலவு வெகுவாக குறைக்கப் படுவதுடன் சுற்றுப்புற சூழலுக்கு எவ்வித கேடும் விளைவிப்பதில்லை.
 
10.சில வகை விளக்குப் பொறிகளில் நன்மை செய்யும் பூச்சிகளை மட்டும் குறிப்பிட்டு வகை ஒளியை பயன்படுத்தி பிரித்து எடுத்த அவைகளை மீண்டும் வயலுக்குள் விடுவிக்கிறது. இதனால் நமது வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
 
11.மிகவும் எளிய அமைப்பான இதை தேவைப்படும் போது பயன்படுத்துவதுடன் குறைந்த செலவில் நாமே தயார் செய்யலாம் மேலும் இதன் ஆயுட்காலம் சரியாக பராமரித்தால் மிக அதிகம்.
 
இதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:
1.எளிய முறையில் நாமே தயார் செய்து பயன்படுத்த கண்டிப்பாக மின் இணைப்பு தேவைப்படும். மானாவரி பகுதியில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இது சற்று சவால் ஆனதாகும்.
 
2.இரவில் இயங்கக்கூடிய அல்லது பயிர்களை உண்ணக்கூடிய பூச்சிகளை மட்டுமே நாம் கவலை இயலும்.
 
3.இதில் நாம் பறக்கக்கூடிய பூச்சிகளை மட்டும் தான் கவர்ந்து அழிக்க இயலும்.
 
4. நன்மை செய்யும் பூச்சிகளான தயிர் கடை அல்லது கும்மிடிப்பூச்சி, கண்ணாடி இறக்கை பூச்சி, கரும்புள்ளி செவ்வண்டு, தேனீக்கள் மற்றும் பல நன்மை செய்யும் பூச்சிகள் இதில் கவரப்படுகிறது.
 
விளக்குப் பொறியை பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை....
 
1.பூச்சி தாக்குதலை பொறுத்து ஏக்கருக்கு ஒன்று அல்லது இரண்டு விளக்குப் பொறியை பயன்படுத்தலாம்.
 
2.பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு விலைகளில் விளக்குப் பொறிகள் கிடைக்கின்றன. விவசாயிகள் தங்களுக்கு ஏற்றவாறு ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
 
3.பயன்படுத்தும் போது விளக்குப் பொறியில் நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்து தனிக் கொள்கலனில் பிரித்து அதனை மீண்டும் வயலில் விடுவிக்க கூடிய அமைப்பு கொண்ட விளக்கு பொறியை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
 
4.நிலத்தைச் சுற்றி அல்லது நிலத்திற்குள் வைக்க வேண்டும். வைக்கும்போது தற்காலிக அமைப்பு கொண்ட இருக்கை அமைப்பை ஏற்படுத்தவும்.
 
5.இருக்கை அமைப்பில் விளக்குப் பொறியை பொருத்தும் போது எவ்வித காற்றினாலும் கால்நடைகளினாலும் சாயாதவாறு பொருத்த வேண்டும்.
 
6.விளக்குப் பொறிகள் நெல், பயிர் வகைகள், காய்கறிகள், பூக்கள் போன்ற குறைந்த வாழ்நாள் மற்றும் குறைந்த உயரம் கொண்ட பயிர்களுக்கு அதன் தடை மட்ட அளவில் பொருத்த வேண்டும். அதாவது பயிர்களின் உயரத்திலிருந்து இருந்து 40-80 cm தொலைவிலையே விளக்குப் பொறி இருக்க வேண்டும்.
 
7.பழங்கள் போன்ற உயரமாக வளரும் மரங்களுக்கு அல்லது பயிர்களுக்கு நிலத்தில் இருந்து ஆரம்பித்த உயரத்தில் விளக்குப் பொறி பொருத்தப்பட வேண்டும்.
 
8.மாலை 6 முதல் இரவு 10 மணி வரை விளக்குப் பொறியை இயக்கினாலே போதும். அல்லது 7 முதல் 11 மணி வரை இயக்கலாம். அதாவது சராசரியாக மூன்று முதல் நான்கு மணி நேரம் பயன்படுத்தினால் போதும். இரவு 11 மணிக்கு மேல் பயன்படுத்துவது உகந்ததல்ல ஏனெனில் பெரும்பான்மையாக பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிகள் இரவு நேரங்களில் உன்னாது.
 
9.தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விளக்குப் பொறியில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளை விடு விப்பதுடன் தீமை செய்யும் பூச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
 
10.சூரிய ஒளியை பயன்படுத்தி இயங்கும் விளக்குப் பொறியை பகல் நேரங்களில் சிறிது நேரம் இயக்க வேண்டும். போதுமான அளவு சூரிய ஒளியை எடுத்துக் கொண்டு இயங்கும்.
 
11.பேட்டரி அமைத்துக் கொண்ட  விளக்குப் பொறியை பயன்படுத்தினால் ஒருமுறை வெற்றியை பேட்டரியை சார்ஜ் செய்தால் போதும் 8 முதல் 10 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
 
12.அனைத்து பயிர்களுக்கும் அனைத்து விதமான மண் மற்றும் சூழ்நிலைகளிலும் விளக்குப் பொறியை பயன்படுத்தலாம்.
 
13.விளக்குப் பொறிகளில் இருந்து வெளிவரக் கூடிய ஒளி கற்றயை பொறுத்து கவரப்படும் பூச்சிகள் மாறுபடும். இருப்பினும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய Flurosecent மற்றும் UV அலை கற்றைகளை வெளியிடக் கூடிய Bulb கொண்ட விளக்குப் பொறியை பயன்படுத்துவது நல்லது.
 
விளக்கு பொறி எந்தெந்த பயிர்களில் எந்தெந்த பூச்சிகளை கவர்ந்து அழிக்கும்...
நெல்-பச்சை தத்துப்பூச்சி, நெல் கூண்டு புழு, தண்டு துளைப்பான், ஆனைக் கொம்பன் ஈ, வெட்டு புழு, இலை சுருட்டு புழு, கொம்புப்புழு புகையான் மற்றும் இதர
 
கடலை -ரோம புழு, சுருள் பூச்சி, புகையிலை வெட்டுப்புழு, வெள்ளைப்புழு மற்றும் இதர
 
பருத்தி- புகையிலை புழு, அமெரிக்கன் காய்ப்புழு, இளஞ்சிவப்பு காய் புழு, இலை சுருட்டு புழு மற்றும் இதர
 
பழங்கள், காய்கறிகள், பயிறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், தீவனப் பயிர்கள் மற்றும் உணவு அல்லது தானியங்கி கிடங்குகளில் பல்வேறு பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுகிறது அதனை விரிவாக பின்னர் பார்ப்போம்..