நெல் பயிர் அதிக தூர்கள் பிடிக்க என்ன செய்ய வேண்டும்
முன்னுரை:
- நெல் பயிரின் மகசூல், பயிரில் தோன்றும் தூர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமைகிறது.ஒரு நெல்பயிர் சராசரியாக 20 முதல் 25 தூர்களை வெளியிடுகிறது. இதில் 14 முதல் 15 தூண்கள் மட்டுமே வளமான நெல் கதிர்களை உருவாக்கும் திறன் படைத்தது.
- இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நெல் கதிர்கள் நீளமானதாகவும் அடர்த்தியாகவும் இருப்பதுடன் நெல் மணிகளின் அளவும் பெரிதாக இருப்பதால் நல்ல மகசூல் பெற இயலும். நெல் பயிரில் அளவுக்கு அதிகமான தூர்கள் வெளி வெளிவருவதால் பெரும்பான்மையான தூர்கள் நெல் கதிர்களை உருவாக்குவதில்லை.
நிலம் தயார் செய்தல்:
- நிலத்தை இரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாக ஆழமாக 15 செ.மீ குறையாமல் உழவு செய்து காய விட வேண்டும்.
- சென்ற பயிர்களின் மீதங்கள்/எச்சங்கள் ஆழமாக சென்று எளிதில் மக்குவதுடன் நோயை உற்பத்தி செய்யக்கூடிய பூஞ்சான மற்றும் பூச்சிகளின் உறக்க நிலைகளை அழிக்கலாம்.
- பின்னர் இந்நிலத்தில் ஏக்கருக்கு 4 டன் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் இடவேண்டும். இதனுடன் தேவையான அடி உரங்களான தழைச்சத்து/அமோனியம் சல்பேட், மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் ஜிங்க் சல்பேட் ஆகியவை இடவேண்டும். அப்போதுதான் முந்தைய பயிர்கள் அல்லது பசுந்தாள் உரப்பயிர்கள் எளிதில் மக்குவதுடன் ஊட்டச்சத்துக்கள் மண்ணில் நிலை நிறுத்தப்படாமல் எளிதில் செடிகளுக்கு கிடைக்க பெறும் முக்கியமாக தழைச்சத்து.
- நெல் பயிர்கள் நன்கு தூர் பிடிக்க ஆரம்ப நிலையில் பயிர்களுக்கு கிடைக்கப்பெறும் தழைச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. நிலத்தில் நீரை பாய்ச்சி இரண்டு நாட்கள் ஊறவைத்து பிறகு சேர் உழவு செய்யவும். சேர் உழவு அதிகம் ஆழம் செல்வதை தவிர்க்கவும். அதிகபட்சமாக 15 - 20 cm ஆழம் செல்லலாம்.
நடவு செய்தல்:
- தயார் செய்த நிலத்தில் ஒருவாரம் கழித்து நடவு செய்ய வேண்டும். நடவு செய்வதற்கு முன் நிலத்தை நன்கு சமன் செய்தல் அவசியம். மேலும் நடவு செய்யும்போது மிதமான நீர் மட்டும் நிலத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- தேர்வு செய்யப்பட்ட நெல் ரகங்களைப் பொறுத்து குறிப்பிட்ட நாட்களில் நாற்றுகளை பிடுங்கி நட வேண்டும். உதாரணத்திற்கு மேம்படுத்தப்பட்ட ரகங்களை 25 நாட்களுக்குள் கண்டிப்பாக நடவு செய்ய வேண்டும். நாட்டு ரகங்களை 40 நாட்கள் கழித்து கூட நடவு செய்யலாம். இது பயிர்களின் தூர் கட்டும் திறனை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.
- பயிர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் நாற்றுப் பண்ணையில் இருந்தால் அதிகமான வேர்கள் உருவாகி விடும். இந்த பயிர்களை நாம் பிடுங்கி நடவு செய்யும்பொழுது வேர்ப்பகுதியில் ஏற்படும் சேதத்தில் இருந்து மீண்டு வந்து தூர் கட்ட அதிக நாட்கள் தேவைப்படும்.
- நடவு செய்வதற்கு முன் நாற்றுகளில் குறைந்தது 3-4 இலைகள் நன்கு விரிவடைந்து இருக்க வேண்டும்.
- நாட்டு ரகங்களை நடவு செய்யும்போது 5-8 பயிர்களையும் மேம்படுத்தப்பட்ட ரகங்களை நடவு செய்யும்போது 3-4 பயிர்கள் நடவு செய்தாலே போதும். நடவு செய்யும்போது பயிர்களின் வேர் நிலத்திற்கு கீழ்ப்புறமாகவும் நாற்றுகளின் கழுத்து நிலத்திற்கு கிடைமட்டமா இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
- அதாவது பயிர்கள் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் ஆழத்திற்குள்ளேயே நடவு செய்ய வேண்டும். எவ்விதமான இரகமா இருந்தாலும் குறைந்தபட்ச இடைவெளியாக 15X15 cm பயன்படுத்துவது உகந்தது.
உர மேலாண்மை:
- அடி உரத்தில் போதுமான அளவு தழைச்சத்து இடவேண்டும். ஆனால் யூரியா இடுவதை தவிர்க்க வேண்டும்.
- புதிய வெள்ளை வேர்கள் உருவாவதை ஊக்குவிக்க நடவு மேற்கொண்ட ஐந்து நாட்களுக்குள் VAM ஏக்கருக்கு 4 கிலோ வீதம் இட வேண்டும். தேவைப்பட்டால் Humic குருணைகளையும் சேர்த்து பயன்படுத்தலாம்.
நீர் மேலாண்மை:
- நடவு மேற்கொண்ட 18- 25 நாட்கள் வரை போதுமான எண்ணிக்கையில் தூர்கள் வெடிக்கும் வரை காய்ச்சலும் பாய்ச்சலமாக நீர் விட வேண்டும்.
- ஆரம்ப நிலையில் நெல் வயலில் சராசரியாக 2 இன்ச் தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் அதிகபட்சமாக 4 இன்ச் தண்ணீருக்கு அதிகமாக வயலில் நீர் தேங்கியிருக்கக் கூடாது அவ்வாறு இருந்தால் வேர்களால் போதுமான அளவு ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள இயலாது.
- மேலும் இது உறுதியற்ற தண்டு உற்பத்தி மற்றும் நோய் /பூச்சி தாக்குதலை ஊக்கப்படுத்துகிறது.
களை மேலாண்மை:
நெல் பயிரின் வளர்ச்சி நிலையில் அவ்வப்போது களைகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நெல் பயிருக்கு ஊட்டச்சத்து, சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் இடவசதி கிடைப்பதில் பின்னடைவு ஏற்பட்டு வளர்ச்சி குன்றியும் தூர்களின் எண்ணிக்கை குறைந்தும் காணப்படும்.
நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:
- நோய் அல்லது பூச்சி தாக்குதல் ஏற்படாத வண்ணம் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் இயற்கை வழி திரவங்களை பயன்படுத்தி எடுக்க வேண்டும்.
- மீறி தோன்றும் நோய் அல்லது பூச்சிகளை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவதால் பயிர் வளர்ச்சியை சீர்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.
வளர்ச்சி ஊக்கி தெளித்தல்:
- மேற்கண்ட அனைத்து வழிமுறைகளையும் சரியாக பின்பற்றினால் கண்டிப்பாக பயிர்கள் நன்றாக தூர் பிடிக்கும்.
- இருப்பினும் போதுமான வளர்ச்சி/தூர் பிடிப்பு இல்லை எனில் 10 லிட்டர் தண்ணீருக்கு FN PRO Plus - 1 tank க்கு 50 ml, 19:19:19- 50-100 கிராம் மற்றும் ஜிங் -25 கிராம் ஆகியவற்றை கலந்து மாலை நேரத்தில் பயிரின் தூர் பகுதியில் நன்கு தெளிக்க வேண்டும். இதனை பயிரின் 25 நாட்களுக்கு முன் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.