காய்கறி பயிர்களில் ஒட்டுக்கட்டுதலும் அதன் நன்மைகளும்

முன்னுரை

  • மனிதர்களின் அன்றாட வாழ்வில் காய்கறிகளின் பண்பாடு தவிர்க்க இயலாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காய்கறி சாகுபடியில் ஏற்படும் அதிக நோய் மற்றும் பூச்சி தாக்குதல், அதிக உர பயன்பாடு, மகசூல் குறைவு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பழ பயிர்களில் ஒட்டுக்கட்டி வீரிய ரகங்களை பெறுவது போன்றே காய்கறி பயிர்களிலும் ஒட்டுக்கட்டுதல் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். 

 

ஒட்டு கட்டுதல் என்றால் என்ன: 

  • ஒட்டுக்கட்டுதல் என்பது ஒரே இனம் அல்லது குடும்பத்தைச் சார்ந்த இரண்டு செடிகளின் பாகங்களை இணைத்து அதன் சிறப்பு பண்புகளை புதிய செடி வடிவில் உருவாக்கும் தொழில் நுட்பம் ஆகும். 
  • இந்தச் செடியின் அடிப்பாகத்தை வேர்ச்செடி எனவும் மேல் பாகத்தை தண்டுக்குச்சி எனவும் அழைப்பார்கள். பொதுவாக வேர்ச்செடிகள் வறட்சியை தாங்கி வளரும் தன்மை, அதிக நீர் அல்லது உப்பை தாங்கி வளரும் தன்மை, வேர் வழியாக பரவக்கூடிய பல்வேறு நோய்களுக்கு எதிராக எதிர்ப்பு தன்மை அல்லது தாங்கி வளரும் தன்மையை கொண்டிருக்கும். 
  • தண்டுக்குச்சியானது நோய் அல்லது பூச்சி எதிர்ப்பு திறன் அல்லது தாங்கி வளரும் திறன், மேம்பட்ட ஊட்டச்சத்து, அதிக விளைச்சல் என பல்வேறு பண்புகளை கொண்டிருக்கும். இந்த இரண்டு பண்புகளையும் ஒருங்கிணைத்து புதிய செடியாக மாற்றி நாம் விரும்பிய பண்புகள் மற்றும் பல்வேறு நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட புதிய செடியை உருவாக்குவது ஒட்டுக்கட்டுதல் நிகழ்வாகும்.

 

கத்தரி செடியில் ஒட்டு கட்டும் முறை:

  • நல்ல வேர் அமைப்பு, அதிக ஆண்டு நிலைத்திருக்கும் தன்மை, வறட்சியை தாங்கி வளர்தல், நோய், பூச்சி மற்றும்  நூற்புழுக்களுக்கு எதிரான செயல்படும் கத்திரி இனத்தைச் சேர்ந்த சுண்டைக்காய் செடியை வேர் செடியாக பயன்படுத்த வேண்டும். 
  • அதேபோன்று நாம் விரும்பிய பண்புகளைக் கொண்டுள்ள கத்திரி ரகத்தை தண்டு குச்சியாக பயன்படுத்த வேண்டும். இதன் இரண்டு தண்டு பகுதியும் ஒரே அளவு உதாரணத்திற்கு பென்சில் தடிமன் உடையதாக இருக்க வேண்டும். 
  • சுண்டைக்காய் செடியில் செங்குத்தாக வளரும் கிளைப் பகுதியில் உள்ள குச்சியை தேர்வு செய்து அதே தடிமன் உடைய கத்தரி தண்டு குச்சியை ஒன்றிணைத்து ஒட்டு கட்ட வேண்டும். அதாவது வேர்ச்செடியின் பாகத்தை சுமார் பத்து சென்டிமீட்டர் உயரத்தில் கத்தி முழுமையாக இருப்பது போன்று தயார் செய்ய வேண்டும் அதில் தண்டுக்குச்சியின் பகுதியை V வடிவத்தில் தயார் செய்து குச்சியின் பகுதியுடன் இணைத்து பிளாஸ்டிக் பயன்படுத்தி இணைத்து கட்ட வேண்டும். 
  • இவ்வாறு செய்தால் அதிக அளவு உணவு இந்த ஒட்டு பகுதிக்கு செல்வதால் எளிதில் ஒட்டுக்கட்டுதல் ஒருங்கிணைந்து புதிய செடியாக உருவாகும். போதுமான வேர் வளர்ச்சி அடைந்தவுடன் இதனை தனியாக பிரித்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு கடினப்படுத்தி பின்பு வயலில் நடவு செய்ய வேண்டும். 
  • இதற்கு 70 முதல் 80 சதவீதம் காற்று ஈரப்பதம் இருக்கும் இடத்தில் பத்து நாட்களும் பிறகு நிழல் வலை கூடாரத்தில் பத்து நாட்களும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு உருவாகும் ஒட்டுச் செடியில் தண்டு குச்சி மற்றும் வேர்ச்செடி ஆகிய இரண்டு பண்புகளும் ஒருங்கிணைந்து கிடைப்பதால் விவசாயிகளுக்கு சாகுபடி செலவினும் குறைவதுடன் அதிக மகசூல் பெற இயலும்.

 

ஒட்டு கத்திரியின் சிறப்பியல்புகள்:

  • நல்ல வேர் அமைப்பு 
  • வறட்சியை தாங்கி வளர்தல் 
  • மண்ணின் கார அமிலத்தன்மையை தாங்கி வளர்த்தல் 
  • அதிகளவு ஊட்டச்சத்து மற்றும் நீரை பயிர்களுக்கு உறிஞ்சி கொடுப்பது 
  • இதனால் நல்ல பயிர் வளர்ச்சி மற்றும் அதிக கா
  • வேர் சம்பந்தமான அனைத்து நோய் மற்றும் பூச்சிகளை தாங்கி வளரும் தன்மை பெறுதல்
  • நீண்ட நாட்களுக்கு மகசூல் தருதல் 
  • அதிக மகசூல் தரும் தன்மையுடையது.