4. துங்ரோ நோய் - நெல் பயிரைத் தாக்கும் நோய்கள்

துங்ரோ நோய்நெல் துங்ரோ பெஸ்லிஃபாம் வைரஸ் மற்றும் நெல் துங்ரோ ஸ்பெரிகல் வைரஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • தாக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சிக் குன்றி, குறைந்த தூர்களுடன் காணப்படும். இலைகள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற மஞ்சள் நிறமாக மாறிவிடும். துரு போன்ற நிறமுடைய புள்ளிகளும் ஏற்படும்.
  • இலை நுனியிலிருந்து நிறமாற்றம் தொடங்கி இலைத்தாள் அல்லது இலை அடிப்பரப்பு வரை விரிவடைகிறது.
  • பூத்தல் தாமதம், சிறிய கதிர் மற்றும் முற்றிலும் வெளிவராத கதிர்கள்.
  • பெரும்பாலான கதிர்கள் மலட்டுத் தன்மையுடனும் அல்லது பகுதி நிரம்பிய தானியங்களுடனும் காணப்படும்.
  • நெற்பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் தாக்கக் கூடியது. துங்ரோ நச்சுயிரி நோய் குறிப்பாக தழைப்பருவத்தில் தாக்குதல் காணப்படும்.

நோயைக் கண்டறியும் முறை:

  • காலை 6.00 மணிக்கு மாதிரி இலைகளை சேகரிக்க வேண்டும்.
  • இலையின் 10 செ.மீ அளவு மேல்பகுதி வரை அயோடின் 2 கிராம் + 6 கிராம் பொட்டாசியம் அயோடைடு 100 மிலி அல்லது 10 மிலி டிஞ்சர் அயோடின் + 140 மில்லி நீர் கொண்ட கரைசலில் 15 நிமிடங்கள் வைக்கவேண்டும். துங்ரோ நச்சுயிரி தாக்கப்பட்ட இலைகள் கரு நீளம் உள்ள கோடுகள்/ வரிகளுடன் காணப்படும்.

நோய் வளர்ச்சிக்கு சாதகமான காரணிகள்:

  • நச்சுயிரிகளின் இருப்பு.
  • நோய் பரப்பும் காரணிகள்.
  • பயிரின் வயது மற்றும் அதன் நோய்க்கு இலக்காகும் தன்மை.
  • நோய் தாக்குதல் நெற்பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளும் குறிப்பாக தழைப்பருவ நிலை
           
  மஞ்சள் இலை   தாக்கப்பட்ட வயல்   தாக்கப்பட்ட வயல் மற்றும் நோயுற்ற வயல்      
         
               

நோய்க் காரணி:

  • துங்ரோ நச்சுயிரி நோய் தத்துப்பூச்சி மற்றும் பச்சைத் தத்துப் பூச்சி (நெஃபோடெட்டிக்ஸ் வைரசென்ஸ) முலம் பரவக் கூடியவை. நெற்பயிர் துங்ரோ கோள வடிவ நச்சுயிரி இடம் பெறவில்லையெனில் தத்துப்பூச்சியால் துங்ரோ உருளை வடிவ நச்சுயிரியை பரப்ப முடியாது.
  • நோய் தாக்கப்பட்ட பயிரின் எந்த பகுதியிலிருந்தும் பூச்சிகள் நச்சுயிரிகளைப் பெறலாம். நச்சுயிரியைப் பெற்ற நோய் பரப்பும் உயிரிகள் உடனடியாக பயிர்களுக்குப் பரப்பிவிடும்.
  • நெற்பயிர் துங்ரோ உருளை வடிவ நச்சுயிரி. 100-300 மிமீ நீளமும், 30-35 மிமீ அகலமும் கொண்டது. இந்த நச்சுயிரியானது இரு உட்கரு அமிலமாக 8.3 கிலோ பைட்ஸ் (8.3 kb) அளவு கொண்டது. நெற்பயிர் துங்ரோ கோள வடிவ நச்சுயிரி சீரான வடிவமுடையது. அதன் குறுக்களவு 30 நானோ மீட்டர் ஆகும். இந்த நச்சுயிரி பலகற்றை ஒரு புரியிழையுடைய உட்கரு அமிலமாக 12 கிலோ பைட்ஸ் அளவைக் கொண்டுள்ளது.

கட்டுப்பாடு:

  • விளக்குப்பொறிகளை வயலில் வைக்கவேண்டும்
  • அதிகாலை வேளையில் விளக்குப்பொறியின் அருகில் மின்னிப் பறந்து கொண்டிருக்கும் தத்துப்பூச்சிகளை பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தோ/தூவியோ கொல்லலாம். இம்முறையை தினமும் மேற்கொள்ள வேண்டும்.
  • நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரங்களான ஐஆர் 36, ஐஆர் 50, ஏடீடி 37, பொன்மணி, கோ 45, கோ 48, சுரேகா, விக்ரமார்யா, பரணி, ஐஆர் 36, மற்றும் வெள்ளைப் பொன்னி ஆகியவற்றை பயிரிடலாம்.
  • நாற்று நடவு செய்யும் தேதியை மாற்றியமைக்கவேண்டும்
  • தரிசு நிலமாக குறைந்தது ஒரு மாத காலமாவது விடுவது அவசியம். இதனால் நச்சுயிரிகள் மற்றும் நோய் பரப்பும் உயிரிகள் ஆகியவற்றை அழிக்க முடிகிறது.
  • நோய்அதிகமாக தாக்கும் பகுதிகளில் பயறுவகை அல்லது எண்ணெய் வித்துப் பயிர்களுடன் பயிர் சுழற்சி மேற்கொள்ளவேண்டும்.
  • 20 சென்ட் நாற்றாங்காலில் வேப்பம்புண்ணாக்கு 12.5 கிலோவை அடியுரமாக அளிக்கவேண்டும்.
  • வரப்புகள் மற்றும் பாத்திகளிலிருக்கும் களைகளை அழித்தல் வேண்டும்.
  • 2% யூரியாவை 2.5 கிராம்/லிட்டர் மேன்கோசெப்புடன் கலந்து தெளிக்கவேண்டும்.
  • யூரியா இலைவழியாக 1% என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
  • தகுந்த நேரத்தில் இராசாயன பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதால் பச்சைத் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
  • நாற்றாங்காலில் 2.5 செ.மீ நீர் இருக்குமாறு வைக்கவேண்டும். கார்போஃபியூரான் 3 ஜி 3.5 கிலோ (அ) ஃபோரேட் 10 ஜி 1.0 கிலோ 20 சென்ட் நாற்றங்காலில் வீசித் துாவிவிட வேண்டும்.
  • நாற்றாங்காலில் நச்சுயிரி தாக்குதல் குறைவாக இருப்பின் கார்போஃபியூரான் @ 1 கிலோ/எக்டர் என்ற அளவில் இடவேண்டும்.
  • முன் தூர் விடும் பருவத்திலிருந்து மத்திய துார் விடும் பருவம்வரை தாக்கப்பட்ட குருத்து 1 மீட்டர் காணப்பட்டாலும், கார்போஃபியூரான் குருணைகள் @ 3.5 கிலோ/எக்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
  • கீழ்கண்ட ஏதேனும் ஒரு பூசனக்கொல்லியை இரு முறை தெளிக்கவும்.
    • தையமீத்தாக்சான் 25 WDG 100 கிராம்/ எக்டர் அல்லது
    • இமிடாக்குலோபிரிட் 17.8 SL 100 மி.லி./ எக்டர், நாற்று நட்ட 15 மற்றும் 30-ம் நாட்களில் தெளிக்கவும். வரப்புகளில் உள்ள தாவரங்களின் மீதும் தெளிக்கவும்.