நெல் வயலில் பாசிகள் வளர்வதற்கான காரணங்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்

 
முன்னுரை:
  • நிலத்தில் தொடர்ச்சியான நீர்த்தேக்கம் அல்லது ஈரப்பதம் இருந்தால் அந்த இடத்தில் பாசிகள் வளர்வதை நாம் காண இயலும். 
  • பாசிகளின் வளர்ச்சி தற்காலிகமானதாக இருந்தாலும் இதனால் நன்மைகளும் உண்டு பல தீமைகளும் ஏற்படுகிறது.

 

  • நன்மை செய்யக்கூடிய நீலப்பச்சை பாசி, வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து கொடுக்கிறது. இது மட்டும் இன்றி பயிர் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்களை உற்பத்தி செய்து தருவதுடன் மண்ணில் இருக்கும் மணிச்சத்தை செடிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்கிறது. 
  • இந்த நன்மை செய்யக்கூடிய நீலப்பச்சை பாசியினை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது 25 சதவீதம் வரை ரசாயன உர தேவையை குறைக்கலாம்.
  • பொதுவாக நீரில் குறிப்பாக நிலத்தடி நீரில் பாசிகள் காணப்படும் இது இயற்கையாகவே சிதைந்து விடுவதால் இதன் வளர்ச்சி நம் காண்பதில்லை. 
  • இவ்வாறு இயற்கையாக நடக்கும் நிகழ்வில் மாற்றம் ஏற்பட்டு நாம் விடும் அதிகபட்ச உரத்தினால் பாசிகள் அபரிமிதமாக வளர்ந்து நெல் பயிரின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை பாதிக்கிறது.

 

 

நெல் வயலில் பாசிகள் வளர்வதற்கான காரணிகள்:

  • தொடர்ச்சியாக நெல் பயில் நீர் தேங்கி இருப்பதால் இது பாசிகள் வளர்ச்சி ஊக்கப்படுத்துகிறது. 
  • இதனால் நாஸ்டாக் மற்றும் சைனோ பாக்டீரியா அதிகளவு பெருக்கமடைந்து நெல் வயலில் காணப்படும் நீரில் பச்சை நிற பாய் போன்று சூழ்ந்து விடுகிறது. 
  • அதிக அளவு அடி உரம் மற்றும் நீர் மேல் இடும் ரசாயன உரங்களினால் இதன் வளர்ச்சி அபரிமிதமாக தோன்றி பயிர் வளர்ச்சியை தடை செய்கிறது.

 

 

பாசி வளர்ச்சியால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

 

 

  • நாற்றங்காலில் இருந்து நெல் நாற்றுகளை பிடுங்கி நடுவதால் அதற்கு ஏற்படும் அழுத்தத்தினால் ஆரம்ப நிலையில் நல்ல வேர் பிடித்து செடிகள் பச்சை கட்ட குறைந்தபட்ச நாட்களை எடுத்துக் கொள்வோம்.
  • இந்த குறைந்தபட்ச நாட்களுக்கு முன்னதாக நாம் அளவுக்கு அதிகமாக ஈடும் ரசாயன உரங்களை பயன்படுத்தி பாசி வேகமாக வளர்ந்து விடுகிறது. 
  • இதனால் பயிர்களுக்கு ஊட்டச்சத்து, சூரிய ஒளி மற்றும் வளர்வதற்கான இடவசதி ஆகியவற்றில் குறைபாடு ஏற்படுவதால் பயிர்களால் வேகமாக வளர முடியாமல் குன்றி காணப்படும்.
  • இதனால் மற்ற பூச்சி மற்றும் பூஞ்சான நோய்களும் நெல் பயிரை எளிதில் தாக்குகிறது.
  • போதுமான வேர் வளர்ச்சி இல்லாத நெல் பயிர்கள் பாசி வளர்ச்சியினால் சரியாக சுவாசிக்க மற்றும் உணவு தயாரிக்க முடியாமல் எளிதில் தொய்வு அடைந்து இறந்து விடுகிறது. கிராமப்புறங்களில் இதனை பயிர் கரைகிறது என்பார்கள். 
  • பாசிகள் நெல் வயலுக்கு இடம் உரங்களை 80 சதவீதம் வரை எடுத்துக் கொள்வதால் பயிர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடும், இதன் அதிகமான வளர்ச்சியினால் மண்ணின் கார அமில தன்மை அதிகரித்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது. 
  • பாசியினால் வெளியிடப்படும் ரசாயன திரவத்தால் மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்களும் தற்காலிகமாக செயல்படாமல் போகிறது. 
  • நெல் வயலில் மீன் வளர்க்கும் பொழுது இது மீன் வளர்ச்சியையும் பாதிக்கிறது. 
  • அதிகம் பாசி படர்ந்த நெல் வயலில் கை களை எடுக்கும் பொழுது இது மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

 

 

நெல் பயலில் பாசியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • கோடை பருவத்தில் ஆழமான உழவு செய்வதால் பாசிகளின் உடலின் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு இறந்துவிடும். 
  • நெல் பயிருக்கு மாற்றாக வேறு ஏதேனும் பயிர் செய்யலாம்.
  • அல்லது ஒரு முறை நேரடி நெல் விதைப்பிலும் மற்றொரு முறை நஞ்சை தயார் செய்தும் நெல் பயிரிடலாம்.
  • நெல் வயலை மேடு பள்ளம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதால் குறிப்பிட்ட இடத்தில் நீர் தேங்கி பாசி வளர்வதை தவிர்க்கலாம்.
  • பயிர்களுக்கு காய்ச்சலும் பாய்ச்சலமாக தண்ணீர் விட வேண்டும். 
  • உப்பு கலந்த நீர் மற்றும் நிலத்தடி நீர் பயன்படுத்தாமல் இருக்கலாம்.
  • மழை பொழிவு காலங்களில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
  • கை களை எடுப்பதை நிறுத்திவிட்டு கோனோ வீடர் பயன்படுத்தி களையை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் படிப்படியாக நெல் பயலில் பாசி வளர்வதை தவிர்க்கலாம். 
  • ரசாயன உரங்கள் பயன்படுத்தும் போது மிகவும் கவனத்துடன் தேவையான அளவு தேவையான நேரத்தில் மட்டும் கொடுக்க வேண்டும்.
  • பயிர்களுக்கு இழை வழியாக ஊட்டச்சத்து தெளிப்பதில் முக்கியத்துவம் கொடுப்பதினால் பாசி வளர்ச்சியை தடை செய்யலாம்.
  • பாசிகளின் வளர்ச்சியை பொறுத்து ஏக்கருக்கு 1-2 கிலோ வரை காப்பர் சல்பேட் இட வேண்டும்.