கத்தரியில் சாம்பல் கூன் வண்டை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
முன்னுரை:
- ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வரும் கத்தரி பயிரில் அதன் மொத்த சாகுபடி செலவில் சுமார் 50 % தொகை குருத்து மற்றும் காய் துளைப்பான், சாம்பல் கூன் வண்டு ஆகிய இரண்டு பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு செலவிடப்படுகிறது.
- சாம்பல் கூன் வண்டு பாதிப்பினால் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. இது மட்டுமின்றி இது வேர்களை இடையூறு செய்வதால் ஆரம்ப காலத்தில் பயிர்கள் இறந்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
- இதனால் பயிர் இழப்பீடும் ஏற்படுகிறது. இது வருடம் முழுவதும் பயிர்களை தாக்கும் வல்லமை கொண்டது.
பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:
- முட்டை - முதிர்ந்த வண்டுகளால் வெளி மஞ்சள் நிற முட்டைகள் மண்ணில் ஆழமாக சுமார் 100 வரை இடப்படுகிறது.இதன் வாழ்நாள் 8-11 நாட்கள்.
- இளம் புழு - வெளிர் மஞ்சள் நிறத்தில் மண்ணில் காணப்படும். இதன் வாழ் நாள் 5-40 நாட்கள் வரை காணப்படும்.
- கூட்டு புழு - மண்ணில் சுமார் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை காணப்படும்.
- முதிர்ந்த வண்டு - வண்டுகள் சாம்பல் முதல் வெள்ளை நிறத்தில் காணப்படும். இதன் இறக்கை பகுதியில் நான்கு கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- முதிர்ந்த வண்டு மற்றும் இளம் புழுக்கள் ஆகிய இரண்டு பருவமும் பயிர்களை தாக்கும் திறன் கொண்டது.
- வண்டுகள் பயிர்களின் இலைகளை உண்டு அதன் விளிம்புகளில் அரை வட்ட வடிவில் அறிகுறிகளை தோற்றுவிக்கும்.
- இளம் புழுக்கள் வேரின் நுனி பகுதியை கத்தரிப்பதால் பயிர்கள் ஊட்டச்சத்து மற்றும் நீரை எடுத்துக் கொள்ள முடியாமல் வாடி இறந்து விடுகிறது. வாடிய தருணத்தில் இருக்கும் பயிர்களை கையில் எடுத்தால் எளிதில் நிலத்திலிருந்து வந்துவிடும்.
- சில நேரங்களில் வேரின் மேற்பரப்பில் சுரண்டி உண்பதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
- இளம் புழுக்களின் தாக்குதல் பயிர்கள் பூ பிடிக்கும் தருணத்தில் அதிகம் தென்படும். மற்ற பருவத்தை விட கோடை பருவத்தில் சற்று குறைவாகத்தான் இதன் தாக்குதல் தென்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- கடைசி உழவுக்கு முன்னதாக ஏக்கருக்கு சுமார் 150 முதல் 200 கிலோ வரை வெப்பம் புண்ணாக்கு அல்லது இடித்த வேப்பங்கொட்டை இடுவதால் வண்டுகளின் இளம் புழுக்கள் வேரை தாக்குவதில் இருந்து ஓரளவிற்கு விடுபடலாம்.
- பூக்கள் பூக்கும் தருணத்தில் அதாவது நடவு செய்த சுமார் 45 லிருந்து 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை ஏக்கருக்கு 100 கிலோ விதம் வேப்பம் புண்ணாக்கு இட்டு மண்ணை கிளறி விட வேண்டும்.
- செடிகளில் வண்டுகளின் பாதிப்பு தெரியும் போது அதனை சேகரித்து அழிக்க வேண்டும்.
- அடி உரம் இடும்போது நன்கு மக்கிய தொழு உரத்துடன் உயிரியல் நூற்புழு கொல்லியான Heterorhabditis அல்லது Steinernima மற்றும் Metarhizium ஒன்று முதல் இரண்டு கிலோ பயன்படுத்தி ஊட்டமேற்றி பின்பு இட வேண்டும்.
- இதே உயிரியல் திரவத்தை செடிகளின் 40 முதல் 90 நாட்கள் வரை 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மண்ணில் மிதமான ஈரப்பதம் இருக்கும் போது வேர் பகுதியில் உற்ற வேண்டும்.
- தொடர்ச்சியாக கத்தரி சாகுபடி செய்யும் வயலில் நிலப் போர்வை பயன்படுத்தி பயிர் செய்வதால் இளம் புழுக்களின் தாக்குதல் குறைந்து காணப்படுகிறது.
- ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் அடி உரமாக ஏக்கருக்கு 10 கிலோ விதம் Carbofuran அல்லது Fibronil மருந்தை குருணை வடிவில் இடலாம்.
- இலை பகுதிகளில் சாம்பல் கூன் வண்டு தாக்குதலின் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளிக்கலாம்.
- இயற்கை வழி திரவங்களான 3G கரைசல், அக்னி அஸ்திரம், ஐந்திலை கரைசல், பிரம்மாஸ்திரம் போன்ற வாடை மிகுந்த திரவங்களை தெளிப்பதால் வண்டுகளை விரட்டலாம்.
- இதை பயன்படுத்தும் போது தொடர்ச்சியாக ஐந்து முதல் ஏழு நாட்கள் இடைவெளியில் தெளித்து வர வேண்டும்.
- ரசாயன மருந்துகள் பயன்படுத்த விரும்பினால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் இரண்டரை சுழற்சி முறையில் தெளிக்க பயன்படுத்தலாம்.
- Ethion+Cypermethrin- 15-25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Fenvalarate - 15-20 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Chlorpyriphos+ Cypermethrin- 25-40 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Lambda cyhlothrin - 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Phenthoate - 15-25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு